இழைவியக்கம்

புதுச்சேரி முதல்வரிடம் மனு அளித்தல்
பத்திரிக்கையாளர் சந்திப்பு
புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை - முதல்வர்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

*பாஜக மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து மாநிலத் தகுதி கேட்டு தீவிரமாக போராட சமூக நல அமைப்புகள் முடிவு!*

*ஊடக அறிக்கை*

சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கோ.அழகர் இன்று (20.12.2022) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பாஜகவின் உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்குப் போன்ற மிரட்டலுக்கு அஞ்சாமல் மாநிலத் தகுதி கேட்டுத் தொடர்ந்து தீவிரமாக போராட சமூக நல அமைப்புகள் முடிவு செய்துள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்பதால் மாநிலத் தகுதி கேட்டு சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு அவர்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகின்றன. 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மனு  அளிக்கப்பட்டது. அப்போது அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பு இல்லை, மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. மாநிலத் தகுதி கிடைத்தால்தான் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியும்.  அன்றாடம் மன உளைச்சலோடு உள்ளோம் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு,  மாநிலத் தகுதி கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளது. 

இந்நிலையில், நியமன சட்டமன்ற உறுப்பினர் வி.பி.இராமலிங்கம் அவர்கள் சமூக நல அமைப்புகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இதற்குப் பதில் அளித்து சமூக நல அமைப்புகள் சார்பில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கப்பட்டது. அப்போது வி.பி.இராமலிங்கம் அவர்கள் எப்படி சட்ட விரோதமாக பல செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை ஆதாரத்தோடு எடுத்துக் கூறப்பட்டது.

அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்று கூறியது என்பது அவருடைய சட்ட விரோதச் செயல்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் அசிங்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் என்ற அர்த்தத்தில்தான் கூறப்பட்டது. 

இந்நிலையில், நேற்றைய தினம் பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் இரண்டு அமைச்சர்கள், 7  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி பேட்டி அளித்துள்ளனர். பின்னர் சட்டப்பேரவைத் தலைவரிடம் சமூக நல அமைப்புகளின் தலைவர்கள் மீது உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளனர். 

சமூக நல அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புள்ளவை, தடை செய்யப்பட்ட அமைப்புகள் என்று அப்பட்டமாக பொய் கூறியுள்ளனர். சமூக நல அமைப்புகள் எந்த ஆட்சியாக இருந்தாலும், ஆட்சியின் அநீதிகளுக்கும், அவலங்களுக்கும் எதிராக மாநில மக்களின் உரிமைகளைக் காக்க சட்டத்தை மதித்துச் செயல்படுபவை என்பதை மக்கள் அறிவார்கள். 

மாநிலத் தகுதி கேட்டுப் போராடுவது பற்றி எதையும் கூறாமல், சமூக நல அமைப்புகளை மிரட்டும் நோக்கில் உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்கு என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் சமூக நல அமைப்புகள் அஞ்சப் போவதில்லை. மாநில மக்களின் நலன் கருதி மாநிலத் தகுதி கேட்டு உயிரைக் கொடுத்தாவது போராடும் நெஞ்சுரம் கொண்டவர்கள் சமூக நல அமைப்பினர். 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் லெட்டர் பேடு அமைப்புகள் என்று கூறிவிட்டு, பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் உள்துறை அமைச்சர், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், 7 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பேட்டி கொடுத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் மீது புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதும், தொடர்ந்து தன்னலமின்றி மக்கள் உரிமைகளுக்குப் போராடுவதன் காரணமாக ஏற்பட்ட அச்சம்தானே? பாஜக மாநிலத் தகுதி குறித்து தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் சமூக நல அமைப்புகள் மீது சேற்றை வாரி வீசி திசைத் திருப்புவதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மாநிலத் தகுதி என்பது புதுச்சேரி மக்களின் உரிமைக் கோரிக்கை. அரசியல் கட்சிகள் அனைத்தும் இக்கோரிக்கையை ஆதரிக்கின்றன. 11 முறை சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த கால மத்திய அரசுகளும், தற்போதைய மத்திய பாஜக அரசும் புதுச்சேரியை மாற்றாந்தாய் மனப்பாங்கோடுதான் அணுகியுள்ளன, அணுகி வருகின்றன.

எனவே, மாநிலத் தகுதி கேட்டு தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவும், மக்களைத் திரட்டிப் போராடவும், இன்னும் தீவிரமாக செயல்படவும் சமூக நல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பாஜகவினரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் உரிமை மீறல், காவல்துறை மூலம் வழக்கு என எவ்வித அடக்குமுறையையும் கண்டு அஞ்சாமல்  மக்கள் ஆதரவோடு அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். 

*கோ.அழகர்,*
*ஒருங்கிணைப்பாளர்,*
*சமூக நல அமைப்புகள்,*
*புதுச்சேரி.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக